முட்களுக்கிடையே ஒரு மலராய்.. நெஞ்சங்களை கிள்ளி..
அழியாத கோலம் போட்டு சென்ற மகேந்திரன்!
சென்னை: முள்களுக்கிடையே மலராய் மலர்ந்து.. நம் நெஞ்சங்களை கிள்ளி.. அழியாத கோலங்களை இட்டு சென்றவர் இயக்குனர் மகேந்திரன்!
இயக்குனர் மகேந்திரனை தவிர்த்துவிட்டு தமிழ் திரையின் தரமான இயக்குனர் பட்டியலை தயாரிக்க முடியாது. அழுத்தமான கதையம்சமும், நேர்த்தியான படைப்புத் திறனும் எளிமையாக புரிய வைக்கும் ஆற்றலும் நிறைந்தவர் மகேந்திரன்.
'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79
1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கை கொடுக்கும் கை' என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
முன்னதாக, 'சபாஷ் தம்பி', 'நிறைகுடம்', 'கங்கா', 'திருடி' உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். கதையாக எழுதி கிடைத்த வரவேற்பைவிட, இயக்குநராக அவருக்குக் கிடைத்த இடம் மிகவும் பெரியது. 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் படமாகும். இதில் அரவிந்த் சாமி, கெளதமி, ரஞ்சிதா உள்ளிட்ட பலர் நடித்தனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கினார் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'நிமிர்', 'Mr. சந்திரமெளலி', 'சீதக்காதி', 'பேட்ட' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கரு.பழனியப்பன் இயக்கிவரும் 'புகழேந்தி எனும் நான்' படத்தில், அருள்நிதியுடன் நடித்து வருகிறார்.
இயக்குநர் மகேந்திரனுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது அதிகமாகிவிட்டதால், டயாலிசிஸ் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 2) அதிகாலை காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணியளவில் அவரது நாராயணபுரம் இல்லத்தில் வைக்கப்படவுள்ளது. இறுதிச்சடங்கு மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை கலாப்பூர்வமாக மட்டுமின்றி வர்த்தக ரீதியாகவும் பெற்றி பெற்றவை. எம்ஜிஆரின் உதவியால் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்த மகேந்திரன் சிறிது காலம் பத்திரிகையாளராகவும் இருந்தவர்.
காமிரா
இவரை முழுமையான ஒரு இயக்குனராக அறிமுகம் செய்த படம் முள்ளும் மலரும். இதன் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. புதிய கோணத்தில் ரஜினி, ஷோபாவின் நடிப்பு, இனிமையான ராஜாவின் இசை, பாலுமகேந்திராவின் காமிரா.. போன்றவை முன்னணி கதாபாத்திரமாய் நடித்தது.
மெட்டி
இதையடுத்து உதிரிப்பூக்கள், ஜானி, பூட்டாத பூட்டுக்கள், நண்டு, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி போன்றவை முக்கியமானவை. ஆர்ப்பாட்டமோ, அமர்க்களமோ இல்லாமல் தெளிந்த நீரோடை போல எளிமையான காட்சிகளாய் மனதில் சம்மணம் போட்டு உட்காரும் அமைதியான ட்ரீட்மென்ட் மகேந்திரனின் தனி சிறப்பு ஆகும்.
உறுத்தும் காட்சிகள்
திரைப்படம் என்பது பிரதானமான கண்காட்சி சாதனமாகும். அங்கு காதுகளைக் காட்டிலும் கண்களுக்குத்தான் வேலை அதிகம் என்பதை துல்லியமாக புரிந்து கொண்டவர் மகேந்திரன். இவரது படத்தின் மொத்த வசனங்களையும் எட்டாக மடித்து சட்டைப் பையில் வைத்து கொள்ளலாம். ஆனாலும் உள்மனது பாரமாக இருக்கும். அதன் உணர்வுகள் சில காட்சிகளால் உறுத்தும்!
கதாநாயகிகள்
நகைச்சுவை என்ற பெயரில் அருவருப்பான காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இவரது படத்தில் இடம்பெற்றதில்லை என்பது கவனத்திற்குரிய விஷயமாகும். இவரது கதாநாயகிகள் ஷோபா, அஸ்வினி, சுகாசினி போன்றோர் கண்ணியம் மிகுந்தே - அதே நேரத்தில் நடைமுறை சமுதாயத்தின் பிரிக்க முடியாத நிஜங்களின் நகல்களாக ஒளிர்ந்தார்கள். இதன் மூலம் பெண்களுக்கு மகேந்திரன் அளித்த மதிப்பும் மரியாதையும் மகத்தானது. மற்ற ஆண்களுக்கும் எடுத்துக்காட்டானது.
பூட்டாத பூட்டுக்கள்
உதாரணத்திற்கு, மகேந்திரனின் புதுமையான படம் என்பதை புரட்சிகரமான படம் என்று சொன்னால் அது பூட்டாத பூட்டுக்கள்தான். இந்த சமுதாயத்தில் எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் அது ரகசியமாக செய்யப்படுமானால் அது நியாயமாகி விடுகிறது. ஆனால் சின்னஞ்சிறு தவறாக இருந்தாலும் அது பகிரங்கமாக இழைக்கப்படுமானால் அது மன்னிக்க முடியாத குற்றமாகிவிடுகிறது. அவ்வாறு மன்னிக்க முடியாத குற்றத்தை பகிரங்கமாக செய்த மனைவி மனம் வருந்தி திருந்திய பிறகு பெருந்தன்மையோடு ஏற்று கொள்ளும் இப்படத்தின் கணவனின் பாத்திரம் அற்புதமானது. ஏனென்றால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே உள்ள ஆத்மார்த்தமான உறவை தீர்மானிப்பது வெறும் பாலுறவு மட்டும் அல்லவே என்பதை இப்படத்தில் அழகாக சொல்லி இருப்பார் மகேந்திரன்.
நெஞ்சத்தை கிள்ளாதே
மற்றொரு படத்தை உதாரணமாக சொல்ல வேண்டுமானால் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தை கூறலாம். மனசு முழுவதையும் ஆக்கிரமித்து கொண்ட படம் நெஞ்சத்தை கிள்ளாதே. சிற்பத்தை கல்லில்தான் செதுக்க முடியும்என்று யார் சொன்னது? வெள்ளை துணியிலும் செதுக்கலாமே என்றார் மகேந்திரன்! தூரிகையில்லாமல் வண்ணக் கலவைகள் இல்லாமல், காமிரா எனினும் எந்திரத்தை தூரிகையாக்கி, அற்புதமான பல வண்ண ஓவியத்தை படைத்து காட்டியவர் மகேந்திரன். சுருக்கமாக சொன்னால், மனிதனின் துல்லியமான உணர்வைகூட நிராகரிக்காமல் அதையும் வெளிப்படுத்திய படம்தான் நெஞ்சத்தை கிள்ளாதே.
திகட்டும் காமிரா வண்ணம்
இவ்வளவையும் தந்த மகேந்திரன், திடீரென படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டார். மலிந்து மலிந்து போன மசாலாத்தனங்களுக்கு கிடைத்த மவுசுகளை கண்டு ஒதுங்கி இருந்தார் போலும்.. நீண்ட இடைவெளிக்கு பிறகே ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டினார். இன்று நம்மை விட்டு பிரிந்துள்ளார் மகேந்திரன்.. ஆனால் மிகக்குறைவான வசனங்கள், கண்கள் திகட்டி போகிற அளவுக்கு காமிரா வண்ணங்கள், உள்ளத்தை உருக்கும் ராஜாவின் இசை, படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தொழில்நுட்பம் என பல அம்சங்கள் மகேந்திரனை என்றுமே நமக்கு நினைவுபடுத்தும்.
அழியாத இடம்
மனசுக்கு இதமாக.. நெஞ்சுக்குள் நீண்ட நாள் அசைபோடும் அளவிற்கு அற்புதமான படங்களை வழங்கிய அசாத்திய கலைஞன் மகேந்திரனுக்கு திரையுலகில் ஒரு அழியாத இடம் உண்டு!
No comments:
Post a Comment