• 06.00 AM - 08.00 AM முதல் ஒலி
  • 08.00 AM - 10.00 AM something special
  • 10.00 AM- 01.00 PM hip hop rock
  • 01.00 PM- 05.00 PM young rhythm
  • 05.00 PM- 09.00 PM மாலை குருவி
  • 09.00 OM -12.00 PM உள்ளம் கொள்ளை போகுதே

Get Domain Offer

எங்கள் அபிமான நேயர்களே: யாழ்ப்பாணம் FM|(Yazhpanam,Jaffnaradio.com) இணையதளம் 24 மணி நேர கடுமையான உழைப்பில்,சிந்தனையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இவ் இணையதளத்தின் வளர்ச்சியும்,வருமானமும் அதற்கு வரக்கூடிய விளம்பர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.. இந்த நிலையில் வாசகர்கள் யாரும் ஆட்பிளாக்கர்(AdsBlocker) உபயோகிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நீங்கள் இணையதளம் பார்க்கும் போது இடையூறாக வரக்கூடிய விளம்பரங்களை தயவுசெய்து X(Close) செய்து கொள்ளுங்கள் கேட்டுக்கொள்கிறோம். நன்றி யாழ்ப்பாணம்.கொம்

சினிமா விருதுகள் 2017- ஆனந்த விகடன்

எஸ்.எஸ்.வாசன் விருது 

இளையராஜா
இசையின் திசை. தமிழர்களின் உயிர் நரம்புகளுக்குள் ஊடுருவிய ராக ராஜா. தமிழ்த்திரையுலகில் இசைக்கு ஓர் இருண்டகாலம் இருந்தது. இந்தித் திணிப்பை எதிர்த்த இதே தமிழ் மண்ணை, இந்தித் திரைப்பாடல்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. அப்போது விடியலுக்கான புதிய பூபாளம், மலைவாழைத் தோப்புகளின் மத்தியில் இருந்து ஒலித்தது. அந்த ‘அன்னக்கிளி’யின் ஒலி, இருட்டைக் கிழித்த இசையின் ஒளி. இளையராஜா என்ற மகத்தான கலைஞனின் வருகைக்குப் பிறகுதான், தமிழர்கள் பின்னணி இசையின் முழுப்பரிமாணத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்துகொண்டார்கள். சிற்பி, ஒரு சிலைக்குக் கடைசியாய்க் கண்களைத் திறப்பதுபோல, படங்களுக்குப் பின்னணி இசைமூலம் உயிரூட்டினார் ராஜா. ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ கேட்டால், காதலிக்காதவர்களுக்கும் காதலிக்கத் தோன்றும். ‘கற்பூர பொம்மையொன்று’ தமிழில் நனைத்த தாலாட்டு. ‘மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்’ புரட்சிப் பாடல் கேட்டால் நம் நரம்புகளுக்குள் தீப்பிடிக்கும். தமிழர்களின் தருணங்கள் அனைத்தையும் இசையால் நிரப்பியவர் இளையராஜா. திரையிசையைத் தாண்டியும் ‘திருவாசகம்’, ‘ஹௌ டு நேம் இட்’, ‘நத்திங் பட் விண்ட்’ என்ற இசைஞானியின் ஆல்பங்கள் அவரது மேதமைக்கான அழுத்தமான அடையாளங்கள். சிம்பொனிக்கும் சிறப்பு சேர்த்தவை மேஸ்ட்ரோ மேதையின் விரல்கள். ஆயிரம் படங்களைத் தாண்டியும் தொடர்கிறது பாட்டுப்பயணம். நெடுந்தூரப் பயணம் செய்பவர்களுக்கு எப்போதும் ராஜாவே துணை. தாயின் மடி, தலை கலைக்கும் வளையல் கரங்கள், குழந்தையின் மென்மை, பூக்களின் மலர்ச்சி... இன்னும் எத்தனை எழுதினாலும் நிறைவுபெறாத நித்தியக் கலைஞனின் மகத்தான பணிகளுக்கு எஸ்.எஸ்.வாசன் விருது தந்து வணங்கி மகிழ்கிறான் விகடன்!

சிறந்த படம்  

அறம்
வளர்ச்சி என்ற முழக்கமும் வல்லரசுக் கனவும் யாருக்கானவை என்ற கேள்வியை அழுத்தமாய் முன்வைத்தது `அறம்.' வணிக சினிமாவின் வழக்கமான சமரசங்களைத் தள்ளிவைத்துவிட்டு, சமூகத்தின் முகத்தில் அறையும் நிஜத்தையும் படமாக்க முடியும் என்று நிரூபித்த சினிமா. வானம் நோக்கி விரையும் ராக்கெட், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து பரிதவிக்கும் சிறுமி என்ற முரணை அடிப்படையாகக்கொண்டு மொத்த இந்தியாவின் அரசியல், சமூக நிலையை அலசிய வகையில் முக்கியமான படம். ஏழைச்  சிறுமியைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற பரிதவிப்புடன் ஒரு கலெக்டரின் இரண்டு நாள் போராட்டம்தான் கதை. ஆனால், இந்த இரண்டு நாள் போராட்டத்துக்கிடையில் அதிகார வர்க்கத்தின் அலட்சியம், நவீனத் தொழில்நுட்பத்தின் கையறுநிலை, அடித்தட்டு மக்களின் மனிதாபிமானம் எனப் பலவும் காத்திரமாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தன. அதிகாரத்தால் எப்போதும் புறக்கணிக்கப்படும் விளிம்புநிலை மனிதர்களின் `அறம்', தமிழ்சினிமாவுக்குத் தேவையான உரம்!

சிறந்த இயக்குநர்  

ந.கோபி நயினார் 
அறம்
அறிமுகப்படத்திலேயே அடித்தட்டு மக்களுக்கான அரசியலைப் பேசியவர் இயக்குநர் கோபி. ‘அறம்’ என்ற படத்தின் தலைப்பே அற்புதத் தேர்வு. ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தைகளை மீட்க முடியாத துயரம் குறித்துப் பேசுவதுதான் படத்தின் மையநோக்கம் என்றாலும், அதைத் தாண்டி ‘அறம்’ பேசிய அரசியல் விஷயங்கள் ஏராளம். ``அஞ்சாறு வருஷம் மழ இல்லாம இருந்தப்பக்கூட, எங்கூர்ல தண்ணிப்பஞ்சம் வந்ததில்ல. என்னிக்கு இந்த பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் வந்துச்சோ, அப்போல இருந்துதான் தண்ணிப்பஞ்சமே வந்துச்சு”,  ``800 கோடியில ராக்கெட் விடுறோம். குழிக்குள்ள விழுந்த குழந்தைய மீட்க கயிற்றைத்தானே நம்பி இருக்கோம்”, “முதல் குழந்தை குழிக்குள் தவிக்கும்போது இந்தப் பதிலைச் சொன்னால் நியாயம். இது 361-வது குழந்தை. இன்னும் இதே பதிலைச் சொல்லிக்கிட்டிருந்தா?” என்று வசனங்கள் எழுப்பிய கேள்விகள், நம் மனசாட்சியின் சுயவிசாரணைக்கானவை. தவிர்க்க முடியாத தமிழ் சினிமாவை உருவாக்கிய இயக்குநர் கோபி, 2017-ன் சிறந்த இயக்குநர்!

சிறந்த நடிகர் 

விஜய் 
மெர்சல்
செம்மண் காட்டில் மீசை முறுக்கி ``இலவச மருத்துவம் வேண்டும்’’ எனப் பொங்கி எழும் மதுரைக்காரன், துள்ளலையும் துடிப்பையும் சட்டைப்பையில் வைத்துச்சுற்றிய ``பீஸ் ப்ரோ’’ மந்திரக்காரன், அடக்கம் காட்டி அன்பைச்சொல்லும் அஞ்சு ரூபா டாக்டர் என மெர்சலில் விஜய் காட்டியது முப்பரிமாண நடிப்பாட்டம். கூடவே குறும்பு, ஆக்‌ஷன், அழுகை, வீரம், தியாகம், ரௌத்திரம் என்று உணர்வுகளின் குவியலையும் கொட்டித்தீர்த்திருந்தார் விஜய். மந்திரக்காரனாக அட்டைகள் சுழற்றும்போதும், ``ரோஸ்மில்க் இருக்கா?’’ எனக் காதலிக்கும்போதும், மனைவியைப் பறிகொடுத்துவிட்டுத் துடியாய்த் துடிக்கும்போதும்... `மெர்சல்’ முழுக்கவே விஜய்தான் நிறைந்திருந்தார். இறுதிக்காட்சியில் ஆளும் அதிகாரத்துக்கு எதிராக விஜய் கோபமாகப் பேசிய ஒவ்வொரு வரிக்கும் திரையரங்குகள் அதிர்ந்து அடங்க நேரம் பிடித்தது. அந்த அதிர்வு டெல்லி வரைக்கும் பாய்ந்தது வரலாறு!

சிறந்த நடிகை 
 
நயன்தாரா 
அறம்
`அறம்’ படத்தில் மக்களின் கலெக்டர் மதிவதனியாகவே வாழ்ந்தார் நயன்தாரா. பல படங்களில் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்திய நயன்தாராவுக்கு, தன்னை இன்னும் அர்த்தமுள்ள வாய்ப்பில் நிரூபிப்பதற்கான அருமையான களம். ஒரு குழந்தையைக் காப்பாற்றிய ‘குற்றத்துக்காக’ தன்னை விசாரணை செய்யும் மேலதிகாரியைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் தைரியப்பெண்ணாகவும், ``மக்களுக்கு எது தேவையோ, அதைத்தான் சட்டமாக்கணும். ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு, அதுல மக்களைத் திணிக்கக் கூடாது” என்று அனல் ஆவேசம் காட்டும் நேர்மையான அதிகாரியாகவும் நெஞ்சில் பதிந்தார் நயன்தாரா.
எம்.எல்.ஏ-வை எதிர்க்கும்போது கோப முகமும், ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமியைத் திரையில் பார்க்கும்போது நம்பிக்கை முகமும் பெற்றோரின் கதறலைக் கேட்கும்போது கலங்கிய முகமும் எனப் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியிருந்த நயன்தாராவின் நடிப்பு, அவருடைய திரைவாழ்வின் உச்சம்!

சிறந்த இசையமைப்பாளர்  

ஏ.ஆர்.ரஹ்மான் 
காற்று வெளியிடை, மெர்சல்
ஆளப்பிறந்த ஆஸ்கர் தமிழன். `சின்னச்சின்ன ஆசை’ காட்டியவரின் இசை, 25 வருடங்களில் `காற்று வெளியிடை’ எங்கும் பரவியிருக்கிறது. ஆஸ்கரை இரு கைகளிலும் ஏந்திவந்த இசைத் தமிழன், இன்று திரையிசையை ஆண்டுகொண்டிருக்கிறார். உள்ளூருக்கென்று இவர் இசையமைத்தால் அது உலகம் முழுவதும் ஒலிக்கிறது. ‘வான் வருவான்’ பாடலில் மெலடியை உருக்கி, `சாரட்டு வண்டியில்’ ஏற்றிக்கொண்டு, ‘ஆளப்போறான் தமிழன்’ என்று `மெர்சல்’ காட்டி நம் நெஞ்சைத் தொட்டுச் சென்ற ஏ.ஆர்.ரஹ்மானைத் தவிர வேறு யார் இந்த வருடத்தின் சிறந்த இசையமைப்பாளராக இருக்க முடியும்? ‘நீதானே... நீதானே’ பாடலின் முதல் இடையிசையின் வீணையும், இரண்டாம் இடையிசையில் இவர் குரலிலேயே வரும் ஆலாபனையும் ரஹ்மான் ராஜ்ஜியம். ரஹ்மான் பற்றவைத்த இசை நெருப்பு உலகம் முழுக்கப் பற்றிப் பரவுகிறது!

சிறந்த வில்லன்

விஜய் சேதுபதி 
விக்ரம் வேதா
கையில் வடையுடன் காவல் நிலையத்துக்குள் கெத்து நடை நடக்கும்போதே தொடங்கிவிடும் வேதாவின் வில்லத்தனம். அந்த அகலக்கால் நடையிலேயே வில்லத்தனத்தைக் கொண்டுவருவதெல்லாம் விஜய் சேதுபதிக்கே உரித்தான கெத்து. ``ஒரு கதை சொல்ட்டா சார்” என்பதில் நிறைந்திருந்த நக்கலும், பரோட்டா-நல்லிக்கறி சாப்பிடுவது எப்படி என்று ஒரு போலீஸ் அதிகாரிக்கே வகுப்பு எடுப்பதில் தெறிக்கும் ஸ்டைலும் விஜய் சேதுபதி பிராண்ட் மேனரிசங்கள். தம்பியின் மீதான பாசமும், இழப்பைப் பதிவுசெய்வதில் இழையோடும் சோகமும் என முரட்டுத்தோலின் ஈரத்தை வெளிக்காட்டி வியப்பூட்டினார். வித்தியாச வில்லத்தனம் காட்டிய விஜய்சேதுபதிதான் 2017-ம் ஆண்டின் சிறந்த எதிர் நாயகன்!

சிறந்த வில்லி 

ஷிவதா 
அதே கண்கள்
அருவியாய்ப் பொழியும் கருணை, கிறுக்குப் பிடிக்க வைக்கிற காதல், கொட்டித்தீர்க்கிற பேரன்பு என தேவதைத்தனம் காட்டிய `அதே கண்களில்’... ஆத்திரத்தைத் தூண்டுகிற துரோகத்தையும், போட்டுத்தாக்குகிற வஞ்சகத்தையும் புன்னகையோடு காட்டி மிரளவைத்தார் ஷிவதா. பெண் கதாபாத்திரத்துக்கே உரிய க்ளிஷேக்கள் எதுவுமே இல்லை. தோளுயரத்துக்குக் கால்தூக்கி உதைத்ததும், முஷ்டியை முறுக்கி இறங்கி அடித்ததும் வேற லெவல் வில்லத்தனம். ஒவ்வொரு முறை ஏமாற்றும் போதும் காட்டிய புன்னகை, கையுங்களவுமாக மாட்டிக்கொண்டதும் `அதுக்கென்ன’ என்று காட்டிய முகபாவங்கள் என ஷிவதா `அதே கண்கள்’ படத்தில் காட்டிய சித்திரங்கள் எல்லாமே சிறப்பானவை. இந்தத் தந்திரக்கார வில்லியை ரசிக்காத கண்களில்லை என்பதே ஷிவதா ஸ்பெஷல்!

சிறந்த குணச்சித்திர நடிகர்  

சத்யராஜ் 
பாகுபலி-2
‘பாகுபலி’யைப் பற்றிய படம்தான் என்றாலும் கட்டப்பா ஏன் கத்தியைச் செருகினார் என்று கட்டப்பாவையே மையம் கொண்டது பார்ட் 2. அறிமுகக்காட்சியிலேயே கிண்டல் செய்கிற நாசரிடம் “நாய் மோப்பம் பிடிக்கத்தானே செய்யும்” என்ற தனக்கே உரிய பாணியில் நக்கலான வசனம் பேசி அட்டகாசமாக அடித்து ஆடியிருப்பார் கட்டப்பா சத்யராஜ். ‘அமரேந்திர பாகுபலி’ பிரபாஸுடன் அடிக்கும் நகைச்சுவை கலாட்டாவில் தொடங்கி குற்றவுணர்வில் கொந்தளிக்கும் கொலை காரனாகத் துடிப்பு காட்டுவது வரை நவரசத்தையும் சுவாரஸ்ய மாய்ப் பல திசைகளிலும் பதிவு செய்திருந்தார் சத்யராஜ். பாகுபலியைக் கொல்லும் அந்த ஒரு நொடியில் அவரது ஆறடி உடலின் ஒவ்வொரு செல்லும் ஆயிரம் உணர்வுகளை வெளிக்காட்டின. தாய்மாமனின் மடியில்தான் முதலில் குழந்தையைப் போடவேண்டும் என்று தேவசேனா தேடி வரும்போது, கூனிக்குறுகி சத்யராஜ் வெளிப்படுத்தும் நடிப்பு, ஒவ்வொரு நடிகரும் கற்றுக்
கொள்ள வேண்டிய படிப்பு!

சிறந்த குணச்சித்திர நடிகை

இந்துஜா 
மேயாத மான்
தமிழ்சினிமாவின் மோஸ்ட் வான்டட் தங்கச்சி. அண்ணனுக்காக உருகுவது, கண்ணீரில் கரைவது, பிழியப்பிழிய சென்டிமென்ட்டில் நனைவது இவையெல்லாம் சுடருக்குத் தெரியாது. யதார்த்தத்தின் வார்ப்பு இந்தத் தீச்`சுடர்.’ பாசத்தைக்கூட, கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்துகாட்டும், தமிழ் சினிமா இதுவரை கண்டிராத அச்சச்சோ சிஸ்டர். அண்ணனின் நண்பன்மீதே காதல் வருவதும், அதை எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் மனதுக்குள்ளே புழுங்குவதுமென இந்த ‘உசரமான’ தங்கச்சிக்கு சவாலான வேடம். ஆனால், துப்பட்டாவை இடுப்பில் கட்டித் துணிச்சலோடு சவாலைச் சந்தித்தார். அண்ணனோடு சேர்ந்து அட்டகாசமான ஆட்டம் ஆடுவதும், ``என்ன சுடரு, கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சாம்ல, யாரு மாப்பிள்ளை?” என்று தான் காதலிப்பவனே தன்னிடம் வந்து கேட்கும்போது, அண்ணனிடம் அழுத்தமான பார்வையை வீசிவிட்டு, சடாரென்று ஹேண்ட்பேக்கை மாட்டிக்கிளம்புவதும் என்று இயல்பாய் நடித்த இந்துஜா,  கோலிவுட்டின் அன்பில் குட்டித் தாய்!

சிறந்த நகைச்சுவை நடிகர்

முனீஸ்காந்த் 
மாநகரம், மரகதநாணயம்
வித்தியாச பாவனையாலும் புதுமையான குரலாலும் தாறுமாறாகச் சிரிக்கவைத்த வித்தியாசக்கலைஞன் `முண்டாசுப்பட்டி’ முனீஸ்காந்த். `மரகத நாணயம்’ படத்தில் ``ஏன் மாப்ள, ஆம்பளப்பேய் ஆம்பளக் கொரல்ல பேசாம அமலாபால் கொரல்லயா பேசும்?’’ என்று ஆவி முகத்தோடு வில்லன்களைக் கலாய்த்துக் காயப்போட்டார் முனீஸ். ‘மாநகர’த்தில் அப்ரன்ட்டிஸ் ரவுடியாக, டெரர் வில்லனின் குழந்தையையே மாற்றித்தூக்கிவந்து அப்பாவித்தனம் காட்டி தியேட்டரையே சிரிப்பால் அதிரவைத்தது அலும்பு அராஜகம். ஏற்றுக்கொண்ட வேடம் எதுவாக இருந்தாலும் அதில் தனிமுத்திரை படைத்து சுமாரான காட்சிகளையும்கூட சூப்பராக மாற்றிக்காட்டிய சிரிப்புக்கலைஞனுக்கு தாராளமாகக் கட்டலாம் இந்த ஆண்டின் முக்கியஸ்தர் முண்டாசு!

சிறந்த நகைச்சுவை நடிகை 

ஊர்வசி 
மகளிர் மட்டும்
மென்மையான நகைச்சுவை நடிப்பு என்பது ஊர்வசியின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. முந்தைய ‘மகளிர் மட்டும்’ படத்திலேயே வெகுளியான நகைச்சுவைப் பாத்திரத்தில் வெளுத்துக்கட்டியவர், இந்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் குணச்சித்திரமும், நகைச்சுவையும் கலந்து வெற்றிக்கொடி நாட்டியிருந்தார். கோமாதா பாத்திரத்தில் குறும்புகளும் குட்டிக்குட்டி ஆசைகளும் என ஒரு நடுத்தர வர்க்கப் பெண்மணியை நம் கண்முன் கொண்டுவந்தார். மகன் வெளிநாடு செல்லும் விமானம் வானத்தில் பறக்கும்போது அண்ணாந்து பார்த்துக் கண்கலங்குவது, ட்யூஷன் வாண்டுகளைச் சமாளிப்பது, கல்லூரிக்காலத்தில் பிரிய நேரிட்ட தோழிகளை மீண்டும் சந்தித்ததும் குதூகலிப்பது என்று இந்த ‘டேக் இட் ஈஸி’ ஊர்வசி அனைவரையும் கவர்ந்த அன்புக்கரசி!

சிறந்த அறிமுக இயக்குநர்  

அருண்பிரபு புருஷோத்தமன் 
அருவி
மிகச்சிறிய பட்ஜெட், புதுமுக நடிகர்கள், சமூக அவலங்களைப் பதிவுசெய்யும் கனமான கண்ணீர்க் கதை... இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு இப்படியும் ஒரு பரபரப்பான படத்தை எடுக்க முடியுமா என வியக்க வைத்த இளைஞர் அருண்பிரபு புருஷோத்தமன். மன்னிப்பின் அவசியத்தை, ஹெச்.ஐ.வியால் பாதித்த மனிதர்கள்மீது காட்டவேண்டிய ஆறுதல் அன்பை வெற்று போதனையாகச் சொல்லாமல் உணர்வுகளின் தோரணமாகச் சொன்னதிலும்,  இத்தனை இறுக்கமான கதையை இவ்வளவு சுவாரஸ்யமாகப் படமாக்கியதிலும் தனித்துத் தெரிந்தார் அருண். ஆழமான கதைக்களம், ஏராளமாக அரசியல், அதிகாரத்தைக் கேள்விகேட்கும் வசனங்கள், அன்பை போதிக்கும் கவிதைகள் என முதல் படத்திலேயே அருண் காட்டியது  அமர்க்கள `அருவி.’

சிறந்த அறிமுக நடிகர்  

வசந்த் ரவி  
தரமணி
ஆண் திமிர், காதலுக்கான கெஞ்சல், வாழ்க்கையின் அற்பத் தருணங்கள் என்று பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய பாத்திரத்தில் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கும் பியர்ட்வாலா வசந்த் ரவி, இந்த ஆண்டின் சிறந்த அறிமுகம். இந்த தாடிக்காரன் பேரன்புப் பிரியன் மட்டுமல்லன், சதா சந்தேகம் கொள்ளும் சராசரி ஆண்களின் பிரதிநிதியும்கூட. இரண்டு எல்லைகளிலும் அதற்கான உயரங்களைத் தொட்டது வசந்த் ரவியின் நடிப்பு. ஒடிசலான தேகம், உள்வாங்கிய முகம் இரண்டுமே பார்வையாளர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்தது. ஆனால், அதே முகம் கொடூரனாக வெளிப்படும்போது பார்வையாளர்களின் சாபங்களையும் பெற்றது என்றால், அது சந்தேகமே இல்லாமல் வசந்த் ரவியின் நடிப்புக்குக் கிடைத்த நற்சான்றிதழ்!

சிறந்த அறிமுக நடிகை  

அதிதி பாலன்
அருவி
கதாநாயகியை மையம் கொண்ட படங்கள் தமிழில் அரிது. அதுவும் அறிமுக நாயகிக்குக் கிடைப்பது அரிதிலும் அரிது. அதிதிக்குக் கிடைத்தது அந்த அதிசய வாய்ப்பு. அதை மிகச்சரியாகப் பயன்படுத்தி, தனது இயல்பான நடிப்பின் மூலம் முதல் இன்னிங்ஸிலேயே இரட்டை சதம் அடித்திருக்கிறார் அதிதி பாலன். புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் வலியையும் வேதனையையும் விரக்தியையும் அன்பு தேடி அலையும் விருப்பத்துக்குரிய வேட்கையையும் சின்னச் சின்ன சந்தோஷங்களால் சிலிர்க்கிற குழந்தைமையையும் அச்சு அசலாய் வெளிப்படுத்தி வியக்கவைத்தார் அதிதி.  கோபம், இயலாமை, திமிர், அலட்சியம், ஆவேசம், மென்புன்னகை, வழிந்தோடும் கண்ணீர் என அதிதியின் நடிப்பே ‘அருவி’யின் அசாத்திய பலம்!

சிறந்த குழந்தை நட்சத்திரம்
 
ஆட்ரியன் நைட் ஜெஸ்லி 
தரமணி
கண்களில் ஆர்வம் மின்னும் ஆட்ரியனும் அவனது சுருட்டை முடியும் இன்னமும் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன. “பிட்ச்னா என்னம்மா அர்த்தம்?” என்று அப்பாவித்தனமாய் அம்மாவிடம் கேட்பது, தன் பாட்டி ஏன் அம்மாவைத் திட்டுகிறார் என்று தெரியாமல் விழிகள் விரிய விழிப்பது, “பியர்டுவாலா” என்று வசந்த்ரவியைப் பிரியத்துடன் அழைப்பது, தன் அம்மாவும் அம்மாவின் நண்பனும் ஏன் சண்டையிடுகிறார்கள் என்று தெரியாமல் குழம்புவது என்று ‘தரமணி’யில் பல விஷயங்களை இயல்பாய்ச் செய்து, அழகாய் நடித்திருக்கும் ஆட்ரியனுக்குக் கொடுக்கலாம் ஒரு பெரிய அப்ளாஸ்!

சிறந்த ஒளிப்பதிவு

எஸ்.ரவி வர்மன் 
காற்று வெளியிடை
மாயக்காரனுக்குத் தொப்பியைப்போல, ரவி வர்மனுக்குக் கேமரா. பாலிவுட்டின் டாப் இயக்குநர்கள் அத்தனை பேரோடும் பயணித்த கேமரா, சாதாரண ஏரியாக்களையும்கூட விண்சொர்க்கங்களாக மாற்றிக்காட்டுகிற மாயம் செய்தது. `காற்றுவெளியிடை’யில் வானும் பூமியும் சங்கமிக்கும் பனிமலைகளையும், மஞ்சள் போர்த்திய மணல் பாலைகளையும் அற்புத ஓவியங்களாக வடித்துத் தந்திருந்தது. கிளைடர் விமானத்தில் நாயகன், நாயகியோடு பறந்தால், தியேட்டரில் நம் சீட்டுகளும் பறந்தன. பனிபோர்த்திய மரங்களின் பறவைப் பார்வையைப் பறந்து பறந்து படம் பிடித்துப் பதிவுசெய்தபோது, நம் கண்ணுக்குள் ஓடின குளிர் நரம்புகள். க்ளைமாக்ஸில் சைபீரிய மலைகளின் பின்னணியில், மணற்பரப்பில் நாயகன் நடக்கும்போது, அவன் மனதின் வெறுமையைக் காட்சிப்படுத்துவதில் கவித்துவமாய்க் காண்பித்திருந்த ரவி வர்மன், தமிழ் சினிமாவின் மாயக்கண்ணாடி!

சிறந்த படத்தொகுப்பு  

ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா 
அருவி
‘அருவி’யின் 20 ஆண்டுக்கால வாழ்க்கையை 25 நிமிடங்களில் அத்தனை அழகுணர்ச்சியோடும், கவித்துவமாகவும் வெட்டி ஒட்டியி ருந்தது ரேமண்டின் கத்தரி. முன்னும் பின்னுமாக மாறி மாறிப் பாயும் இரண்டாம்பாதிக் காட்சிகளில் வேகம்கூட்டியும், இறுதியில் மனதைக் கரையவைக்கும் மருத்துவமனைக் காட்சிகளில் மௌனம் பரப்பியும் ரேமண்டின் எடிட்டிங்கில் அருவி பாய்ந்தது அபாரமாக!

சிறந்த கதை 
 
பிரம்மா  
மகளிர் மட்டும்
‘அவள் அப்படித்தான்’ படம் பார்ப்பதற்காக விடுதி வாசலைத் தாண்டிய மூன்று பெண்கள் பிரிய நேர்வதாகத் தொடங்கும் கதையின் தொடக்கமே, ஓர் அர்த்தமுள்ள அரசியல் குறியீடு. மூன்று வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழும் பெண்களும் குடும்ப அமைப்பால் சுதந்திரத்தைத் தின்னக் கொடுத்த அவர்களின் அவஸ்தை அனுபவங்களும் கதையின் பலமான அடித்தளம். பெண்ணியம் பேசும் சுதந்திரப் பெண்ணான நாயகி ஜோதிகா பாத்திரத்தை மேம்போக்கான பெண்ணியவாதியாகச் சித்திரிக்காமல், அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளில் ஆர்வம் கொண்ட ஆவணப்பட இயக்குநராக உருவாக்கியிருந்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சாதியத்தின் கோரமுகத்தைக் கலை ஆவணமாக மாற்றிய இந்தக் கதையின் பிரம்மா, இயக்குநர் பிரம்மா.

சிறந்த திரைக்கதை

 புஷ்கர் & காயத்ரி
 விக்ரம் வேதா
`இவர் நல்லவர் - ஹீரோ', `இவர் கெட்டவர் - வில்லன்' என்ற வழக்கமான தமிழ் சினிமாவின் ஃபார்முலாவைத் தலைகீழாக்கிய அபார திரைக்கதை. எல்லோருக்கும் அவரவர் பார்வையில் ஒரு நியாயம் இருக்கும் என்பதை சுவாரஸ்யமான சம்பவங்கள் மூலம் அடுத்தடுத்து அடுக்கியதில் அழகுசேர்ந்தது படம். ``ஒரு கதை சொல்ட்டா சார்” என விஜய் சேதுபதி ஆரம்பித்தபோதெல்லாம் ஆர்ப்பரித்தது அரங்கம். உண்மையில் அந்தக் கதை, புஷ்கர் & காயத்ரியின் கலக்கல் திரைக்கதை. ஓர் உண்மையின் இருவேறு பக்கங்களைக் காட்டிய இந்த நம்பர் 1 ஜோடியின் திரைக்கதைதான் இப்போது `விக்ரம் வேதா’வை பாலிவுட் வரை கைபிடித்து அழைத்துச் சென்றிருக்கிறது.

சிறந்த வசனம் 

ராம்  
தரமணி
ராம் படங்கள் என்றாலே வசனங்களும் உயிர்பெறும். அழுத்தமான அரசியல் விமர்சனம், மெல்லிய பகடி, வாழ்வின் யதார்த்தம் வசனங்களில் நிறைந்திருக்கும். ‘தரமணி’யிலும் வசனங்களால் வசியம் செய்திருந்தார் ராம். “ஏன் சிகரெட் குடிக்கிறே? நீ ஒரு பையனோட அம்மா - நீ கூடத்தான் ஒரு அம்மாவோட பையன்”, “வீனஸ் எனக்குப் பொண்டாட்டியா இருந்தாலும் யாரோ ஒருத்தருக்கு அக்காதானேடா, மகள்தானேடா, தங்கைதானேடா?”,  ‘`நாய்ல என்ன நல்ல நாய், கெட்ட நாய்? கரெக்டா பிஸ்கட் போட்டா போதும்’’ என்று வெவ்வேறுவிதமான மனிதர்களின் மனநிலையைச் சித்திரிக்கும் வசனங்கள் எல்லாமே அத்தனை வலுவான சம்மட்டி அடிகள். பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்புகள், விவசாயிகளின் வேதனைப்பாடுகள், ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டடங்கள் என்று ‘மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு’ போடுவதாகச் சொல்லி, நம் முகத்தை நமக்கே காட்டும் கண்ணாடிகளாய் இருந்தன ராமின் வசனங்கள்!

சிறந்த கலை இயக்கம் 

சாபு சிரில்
பாகுபலி - 2
மகிழ்மதி நகரத்தை ஒற்றை ஆளாய் உருவாக்கித்தந்த சினிமா சிற்பி. `பாகுபலி’யின் ஒவ்வோர் அசைவிலும் சாபுசிரிலின் வியர்வைத்துளி இருந்தது. முதல்பாகத்தில் மகிழ்மதி மட்டும்தான். இம்முறை நாயகன் பெண் தேடும் குந்தல தேசத்தையும் உருவாக்குகிற சவாலையும் அநாயாசமாகச் செய்து அசத்தியிருந்தார் சாபு. தேவசேனாவோடு மகிழ்மதிக்குக் கிளம்பும் பாகுபலிக்கு சாபுசிரில் செய்துகொடுத்திருந்தது அதிசயக் கப்பல். முடி துறந்த பாகுபலி மக்களோடு மக்களாக எளியகுடிமகனாக குடிசைகளுக்கு நடுவில் வாழும் அந்த ஊரும், அங்கே மக்களின் வேலைப்பளு குறைக்க பாகுபலி உருவாக்கும் பிரமாண்டக் கருவிகளும், சாபு சிரிலின் கைவண்ணத்தில் எழுந்துநின்ற கலையின் கலையாத சாட்சிகள்!

சிறந்த ஒப்பனை  

நல்லா ஸ்ரீனு, சேனாபதி நாயுடு 
பாகுபலி-2
`பாகுபலி’யில் எல்லாமே பழையவை. அதனால், எல்லாவற்றையுமே புதிதாக உருவாக்க வேண்டிய கட்டாயம். புதிய மனிதர்களைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி எடுத்துச் சென்றது நல்லா ஸ்ரீனு, சேனாபதி நாயுடு கூட்டணியின் ஒப்பனைதான். உச்சி வகிடு முதல் கால் பாதம் வரை பார்த்துப் பார்த்துச் செய்த மேக்கப் நிஜமான மேஜிக். கிராஃபிக்ஸில் 100 பேரை ஆயிரமாகக் காட்டலாம். ஆனால், அந்த 100 பேரையும் அச்சு அசல் போர் வீரர்களாகக் காட்ட ஒப்பனைக்கான மென்பொருள் என எதுவும் கிடையாது. அவை சாத்தியமானது நல்லா ஸ்ரீனு, சேனாதிபதி நாயுடுவின் கைவண்ணத்தாலும் கலைவண்ணத்தாலும்தான்!

சிறந்த சண்டைப் பயிற்சி 
 
திலீப் சுப்பராயன் 
தீரன் அதிகாரம் ஒன்று
`தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் திலீப் சுப்பராயன் அமைத்திருந்தவை வெறும் சண்டைக்காட்சிகள் அல்ல. பாலைவன நிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் நுணுக்கமாக அமைக்கப்பட்ட மனிதவேட்டைகள். வடமாநிலக் கொள்ளையர்களை நாயகன் துரத்தும்போதெல்லாம் நமக்கும் மூச்சிரைத்தது. கிராமத்தில் மாட்டிக்கொண்ட போலீஸ் டீமைக் காப்பாற்ற நாயகன் போடும் சண்டையில், பொறி பறந்தது. வில்லனைப் பேருந்துகளுக்கு இடையில் நாயகன் துரத்தி, மடக்கிப் பிடிக்கும்போது வேகத்தின் கியர்கள் எகிறி விறுவிறுப்புக் கூட்டின. அத்தனைக்கும் காரணம் அசாதாரணமான திலீப்பின் உழைப்பு. உடம்பில் சாம்பல்  பூசிக்கொண்டு நள்ளிரவில் நடக்கும் அந்த ஓநாய் வேட்டை சண்டைக்காட்சியில் புழுதி பறந்தது. திருடன் - போலீஸ் விளையாட்டில் திலீப்பின் ஸ்டன்ட், காக்கிக்குக் கூட்டியது  கம்பீரம்!    

சிறந்த நடன இயக்கம் 

 பிரபுதேவா  
வனமகன், கோடிட்ட இடங்களை நிரப்புக
எலும்புகளையும் வளைக்கும் நடனக்கலைஞன். புதுமையான நடன அமைப்புகளில்,  ஆச்சர்யம் கொடுப்பவர். ஒரு நடனக்காட்சியில் குட்டிக்கதையின் சுவாரஸ்யம் சேர்க்கும் குதூகலம் பிரபுதேவாவின் வித்தை. சின்னச்சின்ன அசைவுகளில் சிலிர்க்கவைப்பார். விரலசைவில் வியக்கவைப்பார். கடும் உழைப்பைக் கோரும் இவர் நடனம். பார்க்கிற நமக்கும்கூட உற்சாகம் ஊற்றெடுக்கும். எழுந்து ஆட நமக்கும் மனசு துடிக்கும்.  ‘டமுகுட்லா’ பாடலில் ஆடியது ருத்ரதாண்டவம். வனமகனில் `டாம் டாம் டமடம டாமில்’ சாயீஷா ஆடியது ஆனந்தத்தாண்டவம். `டமுகுட்லா’வில் முட்டிகளைப் பெயர்த்து எடுக்கிற முரட்டு மூவ்மென்ட்களைப் போட்டுத்தாக்கிய பிரபுதேவா, `டாம்டாமி’ல் போட்டது கடல் அலை போல் வளைந்து நெளியும் கூல் நடனம். எத்தனையோ சிகரங்களை எட்டிவிட்ட போதும் இன்னமும் குறையாத வேட்கையோடு புதுமையாய் நடனம் அமைக்கும் பிரபுதேவாவுக்குப் பல கோடிப் பாராட்டுகள்!

சிறந்த ஆடை வடிவமைப்பு

கோமல் ஷஹானி, நீர்ஜா கோனா, அர்சா மேத்தா, பல்லவி சிங், ஜெயலக்‌ஷ்மி சுந்தரேசன்
மெர்சல்
மூன்று முதன்மைப் பாத்திரங்கள். மூன்றிலும் விஜய். வெவ்வேறு ஊர்கள், வெவ்வேறு குணநலன் கொண்ட பாத்திரங்கள். அந்தந்த கேரக்டர்களுக்கான ஆடைத் தேர்வில் அசத்தினார்கள் கோமல் ஷஹானி, நீர்ஜா கோனா. ‘இவருக்கு வயதே ஏறாதா?’ என்று விஜய்யைப் பார்த்துத் தமிழ்நாடே கேட்டது. காரணம் காஸ்ட்யூம்ஸ். விஜய்க்கு மட்டும் அல்லாமல் நித்யா, சமந்தா, காஜல் என, படத்தில் எல்லோருக்குமே ஆடைகளில் ஆடம்பரம் கூட்டிய வடிவமைப்பாளர்கள் அர்சா மேத்தா, பல்லவி சிங், ஜெயலக்‌ஷ்மி சுந்தரேசன் என அனைவருமே விருதுக்குரியவர்கள்!

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் 

 பாகுபலி-2  
கமலக்கண்ணன்
இல்லாத உலகம் ஒன்றை உருவாக்கவேண்டும். அங்கே இருக்கிற மக்களையெல்லாம் நடமாடச்செய்ய வேண்டும். மகிழ்மதி எனும் கனவுலோகத்தையும் அங்கே நடக்கிற சதுரங்கப்போர்களையும் நிஜமாக நிகழ்த்தவேண்டும் என அத்தனையையும் செய்தது  கமலக்கண்ணனின் வரைகலை. பிரமாண்டமான போர்க் காட்சிகளோ... ரொமான்ஸில் முகிழ்த்து நெகிழ்த்தும் காதல்காட்சிகளோ... ராஜமௌலியின் கனவுகளைக் காட்சிகளாக மாற்றித்தந்தது கமலக்கண்ணனின் கிராஃபிக்ஸ். பாகுபலி கப்பலில் ஏறிப் பாடினாலும், யானைமேல் ஏறி அடித்தாலும், ஆயிரக்கணக்கான வீரர்களோடு மகிழ்மதி அரசனை வீழ்த்தினாலும், மாடுகள் தலையில் தீக்கட்டித் தெறிக்கவிட்டாலும் பாகுபலியின் சாகசங்கள் அத்தனைக்கும் நம்பகத்தன்மை கூட்டியது கமலக்கண்ணனின் நேர்த்தியான வரைகலையே!

சிறந்த பாடலாசிரியர்

 நா. முத்துக்குமார்
தரமணி
‘தரமணி’யின் பாதை நெடுகிலும் பனித்துளியின் ஈரம் காயாத பச்சைப்புல்வெளியாய்ப் போர்த்தியிருந்தன நா.முத்துக்குமாரின் பாடல்வரிகள். ``வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய், நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்” என்று ஆறுதல் தேடி அலையும் காதல் மனதை அத்தனை அழகாய்ப் பதிவுசெய்திருந்தார் அமரர் நா.முத்துக்குமார். “யாரோ உச்சிக்கிளை மேலே குடைபிடித்தாரோ... அது யாரோ? பெருமழைக்காட்டைத் திறக்கும் தாழோ” என்ற ஆன்மாவை வருடும் வரிகள் இசையோடு இழையும்போது, நமக்குள்ளும் பெய்யத் தொடங்கியது ஒரு பெருமழை. “உனக்காக நானும் கடல் தாண்டிப்போவேன். மலை மீதொரு கடல் வேண்டுமா, மழைகொண்டு செய்வேன்” என்ற வரிகள், பேரன்பின் பிடிவாதத்தை நமக்குள் கடத்தின. உணர்வுகளின் கதையைத் தன் பாடல் வரிகளினால் உயிரூட்டித்தந்த முத்துக்குமார் காலத்தின் கவித்துவச் சுடர்!

சிறந்த பாடகர்  

அனிருத்
`யாஞ்சி யாஞ்சி’, `கருத்தவன்லாம் கலீஜா’ விக்ரம் வேதா, வேலைக்காரன்
காதைக் கிழிக்கும் கானா பாடலோ, இதயம் உருக்கும் ஈர மெலடியோ அனிருத்தின் குரலில் உரத்து ஒலித்து அதகளம் செய்தன.  ‘யாஞ்சி யாஞ்சி’யில் காதலைக் குழைத்துக்கொடுத்தவர், ‘கருத்தவன்லாம் கலீஜா’வில் கொட்டியது லோக்கல் குத்து. ’இறைவா இறைவா’ என்ற ஒற்றைப்பாடலில் அத்தனை உணர்ச்சிகளையும் அநாயாசமாகக் கடத்தியிருந்த அனிருத்துக்கு 2017, பாடகராக முக்கியமான ஆண்டு. அருவியின் ஈரம் பட்டுத்தெறிக்கும் மென்மை காட்டும் குரல், திடீரென்று  காட்டாற்று வெள்ளமாய்க் கரையுடைக்கும் ஆவேசம் கேட்டுச் சிலிர்த்தார்கள் இசை ரசிகர்கள். ஜாஸ், ராக், புளூ என்று இசையின் எல்லா வடிவங்களிலும் குரலில் காட்டும் வித்தியாசத்தால் தனித்துத் தெரிந்த அனிருத், கேட்டவரைக் கிறுக்குப்பிடிக்க வைத்த பவர்ஃபுல் பாட்டுக்காரன்! 

சிறந்த பாடகி 
 
ஸ்ரேயா கோஷல் 
`நீதானே நீதானே’, `மழைக்குள்ளே’ மெர்சல், புரியாத புதிர்
கோஷல் என்னும் குயிலின் குரலில் ஒரு பாடலைக் கேட்கும்போது நம் காதல் ஹார்மோன்கள் விழித்துக்கொள்ளும். பரிவு, பாசம், துள்ளல், சோகம், இனிமை, அன்பு என்று எல்லா உணர்ச்சிகளையும் குரல்வழி கடத்தி, மனசுக்குள் நுழையும் மார்கழிப் பனி, ஸ்ரேயாவின் குரல்.  வரியின் பொருளைக் கேட்டு, அந்த வரிக்கு வேண்டிய உணர்ச்சிகளைக் குரலில் கொண்டுவரும் வரம் பெற்றிருக்கும் இந்த இளவரசி ‘நீதானே நீதானே’  என்று பாடியபோது திரையில்  நாயகனோடு ரசிகனும் உருகிப்போனான். ‘மழைக்குள்ளே’ என இவர் குரல் நனையும்போது... நம் மனமும் நனைந்தது. செல்லமாய்க் கொஞ்சும் இவரது குரலின் ஏற்ற இறக்கங்கள், ரோலர் கோஸ்ட்டர் அனுபவம். பத்து மொழிகளிலும் தன் குரலைப் பரவவிட்டிருக்கும் இவர், தமிழுக்குப் பாடும்போது, வார்த்தைகளில் அவ்வளவு துல்லியம். உச்சரிப்பில் அவ்வளவு தெளிவு! 

சிறந்த தயாரிப்பு 

அருவி 
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
சமூக அநீதிகளை நேரடியாகவே கேட்டு சவுக்கடி கொடுக்கிற கருத்துப்படம். இயக்குநர் தொடங்கி எல்லோருமே புதுமுகங்கள். தொலைக்காட்சி தொடங்கி சகல ஊடகங்களையும் புரட்டி எடுக்கிற வசனங்கள்!  இருந்தும் நம்பிக்கையோடு கைகொடுத்து அருவியை அதன் இயல்போடு வெளியிட உதவிய தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு பாராட்டுக்குரியவர்கள். ஹெச்.ஐ.வி பாதித்த மனிதர்கள் மேல் நாம் கொள்ளவேண்டிய பேரன்பை, கோலிவுட் அவசியங்கள் ஏதுமில்லாமல் எடுக்க இந்தச் சகோதரர்கள் கொடுத்த சுதந்திரமே காரணம். சிம்பிள் சினிமாவை சிறப்பாக எடுத்து அதை சிகரம் எட்டச்செய்திருக்கும் ட்ரீம் வாரியர்ஸ் தமிழ்சினிமாவிற்குத் தேவையான அத்தியாவசியக் காவலர்கள்!

சிறந்த படக்குழு
விக்ரம் வேதா
கேள்வியும் பதிலுமாய்த் துரத்தும் கதைக்குத் தெளிவான திரைவடிவம் கொடுத்தது தனிமனித சாதனை அல்ல. பக்காவான குழு முயற்சியால்தான் இது சாத்தியமானது. நக்கலும் நையாண்டியுமாக போலீஸை டீல் செய்தபடி, தன் இழப்புகளுக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கும் விஜய் சேதுபதி; பரமபத விளையாட்டில் பாம்பாய்த் துரத்தும் மாதவன், துடிப்பான புலியாகக் கதிர், மனித மனம் சபலப்படும் நொடியைப் பதிவுசெய்த வரலட்சுமி, காதல் பொழிந்த நெஞ்சாத்தி ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்தமில்லாமல் துரோக ஸ்கெட்ச் போடும்  கலகல காக்கி டீம், அசால்ட்டு காட்டிய ரவுடிகள் அணி என, திரையில் எங்குமே குறைவைக்கவில்லை துடிப்பான நடிகர்கள். மிரட்டலும் மெஸ்மரிசமுமான இசையும், இரண்டு வெவ்வேறு உலகங்களைக் கச்சிதமாய்க் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவும், அத்தனை பாய்ச்சலையும் கச்சிதமாகத் தொகுத்த தேர்ந்த எடிட்டிங்கும் நிச்சயமாக சாதனைகள். சொல்ல வந்ததை முழுமையாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியதில் புஷ்கரும் காயத்ரியும் காட்டியது புலிப்பாய்ச்சல். இவர்களை ஒருங்கிணைத்த தயாரிப்பாளர் `ஒய்நாட் ஸ்டுடியோஸ்’ சஷிகாந்த்துக்குப் பெரிய சல்யூட்!

அதிகம் கவனம் ஈர்த்த படம் 
மெர்சல்
‘மெர்சல்’ என்கிற தலைப்புக்கே  தவுசண்ட்வாலா வெடி போட்டது தமிழகம். இந்த ஆண்டில் தமிழரின் அடையாளமாய் உயர்த்திப்பிடிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றபோது, வரவேற்பின் வாடிவாசல் திறந்தது. ‘ஆளப்போறான் தமிழன்’ சிங்கிள் ரிலீஸ் அடுத்த அதிர்வேட்டு. ட்விட்டரில் மெர்சல் எமோஜி ரிலீஸானது ரசிகர்கள் எதிர்பாராத என்டர்டெயின்மென்ட். இசைவெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் அட்லியின் நம்பிக்கைப் பேச்சு அடுத்த ரவுண்டு அட்ரினலை ஏற்றியது. டீசர் வெளியாகி யூட்யூபின் அத்தனை சாதனைகளையும் அள்ளித் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டது ‘மெர்சல்.’ உலக அளவில் அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட சினிமா ட்ரெய்லர், தமிழ்ப்படத்தின் சாதனைகளில் சிகரம். படம் வெளியாகுமா ஆகாதா என்ற குழப்பங்களைக் கூலாக டீல் செய்து கோலாகலமாக ரிலீஸ் ஆனது. படம் பற்றிய பாசிட்டிவ் பேச்சிலேயே கூட்டம் கூட, கூடுதலாக அரசியல்வாதிகளும் விமர்சனத்தில் இறங்க, ஆபரேஷன் தியேட்டர் தவிர மற்ற எல்லா தியேட்டர்களிலும் `மெர்சல்’ மேஜிக்தான்!

No comments:

Post a Comment

Our Radio App

Download Your Anroid Mobile
Our Radio App Download From Google Drive: http://drive.google.com/open?id=1WF31qTSpnfVZN7ak1ACFmm-coa1LGwtx

Live TV

Our Apps

Jaffnaradio.blogspot.comJaffnaradio.com

Yazhpanam FM App
Tamil Live Stream HD 1080p ToTV.org Hd to TV Classics Tamil HD Hq live tv Classics Tamil live online! Classics Tamil live stream Classics Tamil Jaffnaradio, Tamil Radio, JaffnaFM, JaffnaRadio, Genres: ✯ Classics ✯ classics 4k ✯ classics app ✯ classics broadcast ✯ classics channel ✯ classics channel online ✯ classics digital tv ✯ classics direct ✯ classics for free ✯ classics for tv ✯ classics free channel ✯ classics free live ✯ classics free tv ✯ classics gratis ✯ classics hd channel ✯ classics hd tv ✯ classics hq tv ✯ classics hqtv ✯ classics ip tv ✯ classics ipad ✯ classics iphone ✯ classics iptv ✯ classics iptv channel ✯ classics iptv live ✯ classics iptv stream ✯ classics iptv tv ✯ classics live ✯ classics live free ✯ classics live iptv ✯ classics live online ✯ classics live stream ✯ classics live tv ✯ classics live watch ✯ classics m3u8 ✯ classics mobil ✯ classics mobile tv ✯ classics on tv ✯ classics online free ✯ classics online live ✯ classics online tv ✯ classics pc tv ✯ classics phone ✯ classics program ✯ classics samsung ✯ classics satelite tv ✯ classics smart tv ✯ classics sopcast ✯ classics stream ✯ classics stream free ✯ classics stream live ✯ classics stream online ✯ classics tele ✯ classics television ✯ classics to tv ✯ classics totv ✯ classics tv ✯ classics tv app ✯ classics tv free ✯ classics tv hd ✯ classics tv live ✯ classics tv online ✯ classics tv stream ✯ classics tv video ✯ classics tv watch ✯ classics video tv ✯ classics view free ✯ classics vlc ✯ classics watch ✯ classics watch free ✯ classics watch hd ✯ classics watch live ✯ classics watch online ✯ classics watch tv ✯ classics web tv ✯ classics webcast ✯ Tamil ✯ tamil 4k ✯ tamil app ✯ tamil broadcast ✯ tamil channel ✯ tamil channel online ✯ tamil digital tv ✯ tamil direct ✯ tamil for free ✯ tamil for tv ✯ tamil free channel ✯ tamil free live ✯ tamil free tv ✯ tamil gratis ✯ tamil hd channel ✯ tamil hd tv ✯ tamil hq tv ✯ tamil hqtv ✯ tamil ip tv ✯ tamil ipad ✯ tamil iphone ✯ tamil iptv ✯ tamil iptv channel ✯ tamil iptv live ✯ tamil iptv stream ✯ tamil iptv tv ✯ tamil live ✯ tamil live free ✯ tamil live iptv ✯ tamil live online ✯ tamil live stream ✯ tamil live tv ✯ tamil live watch ✯ tamil m3u8 ✯ tamil mobil ✯ tamil mobile tv ✯ tamil on tv ✯ tamil online free ✯ tamil online live ✯ tamil online tv ✯ tamil pc tv ✯ tamil phone ✯ tamil program ✯ tamil samsung ✯ tamil satelite tv ✯ tamil smart tv ✯ tamil sopcast ✯ tamil stream ✯ tamil stream free ✯ tamil stream live ✯ tamil stream online ✯ tamil tele ✯ tamil television ✯ tamil to tv ✯ tamil totv ✯ tamil tv ✯ tamil tv app ✯ tamil tv free ✯ tamil tv hd ✯ tamil tv live ✯ tamil tv online ✯ tamil tv stream ✯ tamil tv video ✯ tamil tv watch ✯ tamil video tv ✯ tamil view free ✯ tamil vlc ✯ tamil watch ✯ tamil watch free ✯ tamil watch hd ✯ tamil watch live ✯ tamil watch online ✯ tamil watch tv ✯ tamil web tv ✯ tamil webcast