தமிழ் சினிமா உலகின் திறமைசாலிகளைக் கௌரவிப்பவை ஆனந்த விகடன் சினிமா விருதுகள். 2017-க்கான விருது விழா சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இளையராஜா, கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், விஜய், நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவின் சில சிறப்புத் தருணங்கள்...
* வாழ்நாள் சாதனையாளருக்கான எஸ்.எஸ் வாசன் விருதை இசைஞானி இளையராஜாவிற்கு நடிகர் கமல் ஹாசன் வழங்கினார். அப்போது இளையராஜாவுடனான தனது நெகிழ்வும் மகிழ்வுமான தருணங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன். விருதைப் பெற்ற இளையராஜா திடீரென கமல்ஹாசனிடம் அரசியல் பிரவேசத்தைப் பற்றிக் கேட்டார். “ஜனவரி 26 முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படி தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன் ” என்றார் கமல்.
* அருவி, விக்ரம் வேதா, மெர்சல் படங்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றன.
* பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்து விரைவில் வெளியாக இருக்கும் நாச்சியார் படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.
* நடிகர் விஜய் சேதுபதி சிறந்த வில்லனுக்கான விருதை விக்ரம் வேதா திரைப்படத்துக்காக பெற்றுக்கொண்டார்.
* ஏ.ஆர் ரஹ்மானுக்கு மெர்சல், காற்று வெளியிடை இரண்டு படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஷங்கர் வழங்கினார். அதைத் தொடர்ந்து ரஜினியின் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகிக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் மேக்கிங் காட்சிகள் திரையிடப்பட்டது.
* 2017-ன் சிறந்த படத்திற்கான விருது அறம் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
* ’அறம்’ படத்திற்காக நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுக்கொண்டார்.
* இயக்குநர் ராம் மேடையேறி தனது நண்பர் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பற்றிய தனது நினைவுகளை மிக உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். அரங்கத்தினர் அனைவரும் நா.முத்துக்குமாருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். சிறந்த பாடலாசியருக்கான விருதை நா.முத்துக்குமார் சார்பாக அவர் மகன் ஆதவன் பெற்றுக்கொண்டார்.
* அருவி படத்துக்காக இயக்குநர் அருண் பிரபுவுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதும், நடிகை அதிதி பாலனுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும், சிறந்த தயாரிப்புக்காக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்திற்கும் விருது கிடைத்தது.
* சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதை தரமணி படத்துக்காக இயக்குநர் ராம் பெற்றுக்கொண்டார்.
* மெர்சல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விஜய்க்கு கமல் வழங்கினார். விருதை பெற்ற விஜய் மெர்சல் படம் உண்டாக்கிய அதிர்வலைகள் தான் முன்னரே எதிர்பார்த்ததுதான் என்றார்.
நன்றி: ஆனந்த விகடன்
No comments:
Post a Comment